Thursday, May 15, 2008

தசாவதாரம் பிரச்சினை

கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்
தசாவதாரம் படத்தின் சில காட்சிகளை நீக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷணா என்ற அமைப்பின் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதில் மனு அளித்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பின்வருமாறு அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
படத்தின் மொத்த கதையின் பின்னணி தெரியாமல் டிரெய்லரில் வரும் ஒன்றிரண்டு காட்சிகளை பார்த்துவிட்டு மனுதாரர் இவ்வாறு கூறுகிறார். சைவ வைணவர்களுக்கு இடையே மோதல் வருவதாக எந்த காட்சியும் இதில் இல்லை. சிலையோடு ராமானுஜரை சேர்த்து கட்டுவதாக கூறுவது தவறு. கடலில் விடுவதற்கு முன்பாக சிலையோடு கதாநாயகனை சேர்த்து கட்டுவது என்பது படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனைதான்.

வைணவர்கள் உள்ளிட்ட எவரையும் புண்படுத்தும் விதத்தில் படத்தில் எந்த காட்சியும் இல்லை. தீவிர வைணவ பாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். கடவுள் விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்.

ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதை மீதோ யாரும் கால் வைப்பது போல் காட்சி இல்லை. ராமானுஜர் பாத்திரத்தில் கமல் நடிக்கவில்லை. வன்முறையை சித்தரிக்கும் விதத்தில் காட்சிகளும் இல்லை. படத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தசாவதாரம் பெயரை கேலி செய்யும் விதத்தில் படம் இல்லை.

நானும் விஷ்ணுவின் தீவிர பக்தன்தான். மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் நான் செயல்பட மாட்டேன். எனவே காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே சென்சார் போர்டு இதை பரிசீலித்து சான்றிதழ் வழங்கிவிட்டது.
இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமாரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.சென்சார் போர்டின் மண்டல அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த பதில் மனுவில், படத்தின் பெயர் சினிமா பட சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மீறியதாக இல்லை. எனவே பெயருக்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய காரணம் இல்லை.

நவராத்திரி என்கிற படத்தில் நடிகர் சிவாஜி நடித்தார். மக்கள் இதை தவறாக பார்க்கவில்லை. அவதாரம், கல்கி ஆகிய படங்களின் பெயர்களுக்கும் சான்றிதழ் அளித்துள்ளோம். 30 ஆண்டுகளுக்கு முன்பாக தசாவதாரம் என்கிற பெயருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஓம் மந்திரத்தின் மீதோ, பகவத் கீதையின் மீதோ கால் வைப்பதாக எந்த காட்சியும் இல்லை. ராமானுஜரின் சீடரான ரங்கராஜன் நம்பி என்கிற பாத்திரத்தில் கமல் நடிக்கிறார். தனது குருபக்தி காரணமாக அவர் தியாகம் செய்கிறார்.

சிதம்பரம் கோவிலில் இருந்து கோவிந்தராஜ சிலையை அகற்ற முற்படும்போது வீரர்களுடன் ரங்கராஜன் நம்பி சண்டை போடுகிறார். இன்னும் படம் வெளியிடப்படவில்லை.

படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த காட்சிகளின் தாக்கம் என்ன என்பதை படம் பார்த்த பிறகே ஆராய முடியும். யூகத்தின் அடிப்படையிலேயே இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG