மலேசியாவில் ஓட்டல் ஒன்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாமண் துன் டாக்டர் இஸ்மாயில் என்ற இடத்தில் அமைந்துள்ள மக்புல் ரெஸ்டராண்ட் என்னும் உணவு விடுதியில் ஏறத்தாழ 37 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று வேலை செய்கின்றனர்.பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இந்த உணவகத்தின் அதிபர் சமிக் பரதோஷ் என்பவருக்கு கோலாம்பூரில் உள்ள 6 கிளைகளில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தின் தொழிலாளர்கள் விடுப்பு கேட்டாலோ, உரிய ஊதியம் கேட்டாலோ உள்ளூர் அடியாட்களை வைத்து அடித்து, உதைத்து துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கும் கொடுமையாகும்.
கடுமையான பணிச்சுமையுடன், ஓய்வும், ஊதியமும், விடுப்பும் இன்றித் தவிக்கும் இந்த தொழிலாளர்கள் கடுமையான தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், உணவக அதிபரின் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சில நாட்களுக்கு முன் உயிருக்கு அஞ்சி, கோலாப்பூர்- பத்துமலை கோயிலில் தஞ்சமடைந்த 37 பேரையும் காவல்துறையினர் மீண்டும் உணவு விடுதியிலேயே ஒப்படைத்து இருக்கின்றனர்.இந்த நிலையில் 6 பேர் மீது உணவு விடுதி உரிமையாளர் திருட்டு பழி சுமர்த்தி காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்திய தூதரகமோ, மலேசிய தூதரகமோ இதை தட்டிக்கேட்கவில்லை. இந்திய அரசு, இந்த விடயத்தில் தலையிட்டு மக்புல் உணவு விடுதியில், பணிபுரியும் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.தமிழகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment