IPL கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை கண்டது. IPL 20 ஓவர் கிரிக்கெட்டில் 16-வது ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணித் தலைவர் கங்கூலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மெக்கல்லமும், கங்கூலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொல்லாக் வீசிய 3-வது பந்தில் கங்குலி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை பொல்லாக் கைப்பற்றினார். அடுத்த 2வது பந்தில் அதிரடி வீரர் மெக்கல்லம் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த விக்கெட்டையும் பொல்லாக் எல்.பி.டபிள்யூ முறையில் கைப்பற்றினார்.
பின்னர் வந்த தாஸ் (29), டேவிட் ஹஸ்ஸி (17) டிக்கி பாண்டிங் (19) ஆகியோர் சொற் ரன்களில் ஆட்டம் இழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும், லட்சுமி ரத்தன் சுக்லா கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சுக்லா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஜெயசூர்யா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன்கள் விட்டு கொடுத்தார்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 25 ரன்களுக்குள் 3 பேர் ஆட்டம் இழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு உத்தப்பாவும், பிராவோவும் இணை சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
பிராவோ 53 பந்துகளில் 64 ரன்களுடனும், உத்தப்பா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக 4 தோல்விகள் அடைந்த மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும். கொல்கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
Wednesday, April 30, 2008
IPL கிரிக்கெட் : மும்பை அணிக்கு முதல் வெற்றி.
Posted by udanady at 4/30/2008 11:05:00 AM
Labels: கிரிக்கெட், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment