Friday, May 30, 2008

பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு - ஜெயலலிதா

சென்னை, மே 29: பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் ஈட்டும் சந்தையாக தீவிரவாதிகள் இந்திய பங்குச் சந்தையை பயன்படுத்துகின்றனர் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

பங்குச் சந்தையில் நடப்பவற்றைத் தெரிந்துகொண்டும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மௌனம் காக்கிறார். இதனால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை நிதி அமைச்சர் ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்திய குடிமகன் ஒருவன் சாதாரண வங்கிக் கணக்கை தொடங்குவதற்கே முகவரி, புகைப்படச் சான்று மற்றும் வருமானவரி கணக்கு எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு வழங்கும் பங்கேற்பு சான்றிதழைக் (பி-நோட்) கொண்டு இந்திய சந்தையில் மிக எளிதாக முதலீடு செய்கின்றனர் அன்னிய முதலீட்டாளர்கள்.

உண்மையான முதலீட்டாளருக்குத்தான் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறதா என்று தெரியாது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் பெரும் தொகையை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். ‘செபி'யில் பதிவு செய்யாமலேயே பங்கேற்பு சான்றிதழைப் பெறுகின்றனர்.

பங்கேற்பு சான்றிதழ் பெற்றவர்களின் விவரங்களை வெளியிடுமாறு அன்னிய முதலீட்டாளர்கள் அமைப்பிடம் ‘செபி' கேட்டும், விவரங்கள் கிடைக்கவில்லை. மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இதுகுறித்துத் தெரியவில்லை.

பங்கேற்பு சான்றிதழைக் கொண்டு செய்யும் முதலீடுதான் பங்குச் சந்தையின் திடீர் ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம். பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால் தற்கொலைகளும் நடந்துள்ளன.

‘செபி' தலைவர் எம். தாமோதரன் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் கூட, ‘‘பங்குச் சந்தையில் புழங்கும் பணத்தில் நான்கில் ஒரு பங்கு வெளிநாட்டு முதலீடு. அதுவும் பினாமி பெயர்களில் பெறப்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களைக் கொண்டு முதலீடு செய்யப்பட்டவை'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை உண்மையான அன்னிய முதலீடா? உள்ளூர் கருப்புப் பணத்தை பங்கேற்பு சான்றிதழ் மூலம் முதலீடு செய்துள்ளனரா? அல்லது, தீவிரவாதிகள் முதலீடு செய்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன.

''தீவிரவாதிகள் தங்களது செயல்பாட்டுக்கு பணத்தை ஈட்ட இந்திய பங்குச் சந்தையைப் பயன்படுத்துகின்றனர். மும்பை, சென்னை பங்குச் சந்தையில் சில நிறுவனங்கள் பெயரில் செய்த முதலீடு, தீவிரவாத அமைப்புகள் செய்தவை என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது‘‘ என்று 2007-ல் மூனிச் நகரில் நடந்த பாதுகாப்பு கொள்கை பற்றிய கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

பினாமி பெயர்களில் பங்கேற்பு சான்றிதழைப் பெற்று, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்த பின் மாலத்தீவு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்மூலம், மாலத்தீவிலிருந்து இந்திய மூலதனச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அன்னிய முதலீட்டாளர்கள், மாலத்தீவு வழியாக இந்தியாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வருவாய், மாலத்தீவு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்கிறது என ரிசர்வ் வங்கியும் கவலை அடைந்துள்ளது.

ஆனால், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்த இழப்பீடுகளுக்கு பலத்த மௌனம் காக்கிறார். இப் பிரச்னையைத் தடுக்க கடும் நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவில்லை என்றால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை அவர் தெரிந்தே ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments:

Free Blog CounterLG