பெட்ரோல்-டீசல், சமையல் கேஸ் விலைகளை உயர்த்தியுள்ளன் மூலம் மத்திய அரசு தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளன.
விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளன.மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளும் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளன.அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,சாதாராண மக்கள் மீது விலை உயர்வை அமல்படுத்திவிட்டு, ரிலையன்ஸ்- எஸ்ஸார் போன்ற தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் மீது எந்த கூடுதல் வரியையும் விதிக்காமல் விட்டுள்ளது மத்திய அரசு.இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய எண்ணெய் மீதான வரிகளை மேலும் குறைத்திருந்தால் விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். அதை உடனே செய்ய வேண்டும்.
வரிகளைக் குறைத்து பெட்ரோல், கேஸ், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.நாட்டின் எரிவாயு, பெட்ரோலியத்தை சுரண்டி வரும் தனியார் நிறுவனங்கள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும். இதைத் தான் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சொல்லி வந்தோம். அதை அரசு காதிலேயே வாங்கவில்லை.ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் எரிவாயு, பெட்ரோலியத்தை தோண்டி எடுத்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏராளமான லாபம் சம்பாதித்து வருகின்றன. அவைகள் மீதான வரியை அதிகமாக்கி, சாதாரண மக்களை விலை உயர்விலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வை அமலாக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் பண வீக்கம் இன்னும் அதிகரித்து, விலைவாசி மேலும் கூடப் போவது நிச்சயம்.இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியம் மீதான வரிகளை குறைக்க வேண்டு்ம். அதை விட்டுவிட்டு விலை உயர்வை அமலாக்கி அரசு அழிவுப் பாதையில் சென்றுள்ளது.முதலில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் பெட்ரோலியம் எடுப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
அந்த காண்ட்ராக்ட்களை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் பெட்ரோலியத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இவர்கள் நாட்டின் பெட்ரோலிய வளத்தை சுரண்டி, அதை ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விற்பதையே ரிலையன்ஸ் நிறுத்திவிட்டது.உற்பத்திக்கான மூலப் பொருளாக விளங்கும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் விவசாயத்தில் ஆரம்பித்து அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படும். இதனால் விலைகள் மேலும் கூடு்ம். சாதாரண குடும்பங்களும் மேலும் திண்டாடும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பர்தான் கூறுகையில், பெட்ரோலியத்துக்கு இதற்கு மேல் மானியம் தர நிதி இல்லை என்று சொல்லும் இதே பிரதமர் தான், தனியார் நிறுவனங்களுக்கு மானியத்தை அள்ளித் தருகிறார். இந்த விலை உயர்வை எதி்ர்த்து நாடு முழுவதும் ஒரு வாரத்துக்கு ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.மூத்த இடதுசாரித் தலைவர் தேபாங்கர் முகர்ஜி கூறுகையி்ல், இந்த விலை உயர்வு நியாயமற்றது மட்டுமல்ல, தற்கொலைக்கு சமமானது.
எந்தத் தவறும் செய்யாத பொது ஜனத்தை நோகடித்துவிட்டு தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கூடுதல் வரி ஏதும் விதி்க்காமல் தப்ப விட்டுள்ளனர் என்றார்.பாஜகவும் கண்டனம்:இந்த விலை உயர்வுக்கு பாஜகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதை எதிரித்து தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார்.பெட்ரோலியம் மீதான இறக்குமதி வரியை முழுவதுமாகக் குறைத்து, விலையை உயர்த்தாமல் தவிர்த்திருக்க முடியும் என்ற சூழலில் அரசு அதை ஏன் செய்யவில்லை என்று புரியவில்லை. அரை மனதுடன் பேருக்காக கொஞ்சம் வரியைக் குறைத்துவிட்டு மிச்சத்தை மக்களின் தலையில் கட்டிவிட்டுள்ளனர் என்றார்.தமிழகத்தில் 6ம் தேதி வேலை நிறுத்தம்:தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 6ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் வரதராஜன் கூறியுள்ளார்.